எனது பால்ய கால அனுபவம் இது…
நாம் சிறுவயதில் பாடசாலை செல்லும் போது பெற்றோரை வணங்கி விட்டு செல்லும் வழக்கம் எம்மிடம் இருக்கவில்லை.
வெறுமனே நாம் போகிறோம் என்று கூறி பெற்றோரிடம் இருந்து விடைபெற்றோம்.
அவ்வளவு தான். சித்திரை புத்தாண்டு தினத்தில் அந்நாளுக்குரிய சடங்குகளை அனுஷ்டிக்கும் போது மட்டுமே நாம் தாய் தந்தையரை கும்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தோம். தவிரவும் அந்நாளில் வீட்டுக்கு வருகைதரும் உறவினர்களுக்கு கூட கும்பிடுமாறு எமது பெற்றோர் எமக்கு கூறவில்லை.
1980ல் பாடசாலையில் ஒருநாள் எமது வகுப்பாசிரியர் கரும்பலகையில் இரண்டு ஓதல் வாசகங்களை எழுதி
அதை சத்தமாக வாசிக்கும் படி பணித்தார்.
“தசமாசே ஊரே கத்வா”
என்று ஆரம்பிக்கின்ற அந்த வாசகங்களை திங்கட்கிழமை மனப்பாடம் செய்து கொண்டு வருமாறும் எமக்கு கூறினார்.
திங்களன்று காலைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அனைவரையும் விழித்து, நாளைமுதல் பாடசாலைக்கு வரும்போது ஒவ்வொருவரும் தாய் தந்தையரை கும்பிட்டு வணங்கிவிட்டு வரவேண்டும் . மேலும் வணங்கும் போது மறக்காமல் அந்த ஓதலை பாராயணம் செய்தே வணங்கவேண்டும் எனவும் வணங்காமல் வருபவர்களை நான் கவனித்துக்கொள்கிறேனே என்று கடுமையாக சொல்லி வைத்தார்.
மறுநாள் காலை பள்ளிக்குச் செல்லுமுன் என் பெற்றோரை கும்பிடத் தயாரானேன்
“என்ன இது..?
“அதிபர் தான் சொன்னார்.வரும்போது உங்களை வணங்கி விட்டு வரும்படி.!”
ஹ்ம்ம்..!
எனது பெற்றோர் காலையில் நான் அவர்களை வணங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. நாமும் தொடர்ந்து அவர்களை கும்பிடுவதை கைவிட்டு விட்டோம்.
ஒருநாள் அதிபர் வகுப்பறைக்கு வந்தார்…
தாய் தந்தையரை வணங்கி விட்டு பாடசாலைக்கு வருபவர்கள் கையை உயர்த்துங்கள்….
சிலர் ஒரேயடியாக கையை தூக்கினார்கள்.சிலர் சுற்றும்முற்றும் பார்த்து விட்டு மெதுவாக கைதூக்கினர்.
எல்லோரும் கையை உயர்த்தியடியால்
நானும் உயர்த்தினேன்.
2017 ம் ஆண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு பாடசாலைக்கிடையில் சகவாழ்வு நோக்கத்தில் சந்திப்பொன்றை நிகழ்த்தினோம்.
ஒன்று துணுக்காயில் அமைந்திருந்திருக்கும் தமிழ்மொழிப்பாடசாலை. மற்றது கெபித்திகொள்ளாவையில் அமைந்திருக்கும் சிங்கள மொழிப் பாடசாலை. ஆறுமாதங்கள் நாம் இவ்விரு பாடசாலைகளிலும் தனித்தனியாக பணிசெய்து விட்டு பிறகே
இவ்விரு பாடசாலையின் பிள்ளைகளையும் சந்திக்க வைத்தோம்.
இவ்விரு பாடசாலையின் பிள்ளைகளும் ஆசிரியர்களும் மிகநல்லவர்கள்.
ஆனால் இரு பாடசாலையிக்கிடையிலும் கலாச்சார வேறுபாடுகள் பெருமளவில் காணப்பட்டன.
நாம் தமிழ்ப் பாடசாலைகளுக்கு செல்லும் போது அப்பிள்ளைகள் எம்மோடு நெருக்கமாக நடந்து கொண்டனர். எமது கைகளை பிடித்துக் கொண்டு ஒவ்வொரு இடத்திற்கும் அழைத்துச் செல்வார்கள். அவர்களை விட்டு விட்டு வரும் போது எமது கைகளில் தொங்கிக் கொண்டு கேட் வாயிலைக் கடக்கும்வரை வந்து எமது வாகனங்களை பிடித்துக் கொண்டு நாம் வெளியேறும் வரை பின்னால் ஓடி வருவார்கள்.
ஒருநாள் அதிபர் கேதீஸ்வரனின் வீட்டுக்கு பகலுணவு சாப்பிடப் போகும்போது அவரது தந்தையான எண்பது வயது முதியவர் என்னை இருகக் கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டார்.
அக்காலங்களில் மனதில் எந்த அச்ச உணர்வுமின்றி மிகச் சுதந்திரமாகப் பழகினோம்.
அந்த பாடசாலையில் இருந்து சுமார் 90கிலோமீற்றருக்கு அப்பால் சிங்கள பாடசாலை அமைந்துள்ளது. அங்கும் நாம் போகும் போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எவ்வளவு மறுத்த போதும் எம்மை உபசரிக்க அவர்கள் மிகவும் பிரயத்தனம் எடுப்பார்கள்.
தமிழ் மொழிப் பாடசாலையிலிருந்து சென்ற நமக்கு சிங்களப் பாடசாலை மாணவர்களிடம் பெரியதொரு வேறுபாடு காணக்கூடியதாக இருந்தது.
அதாவது, அந்தப்பிள்ளைகள் எம்மீதான அச்ச உணர்வை எம்மிடம் வெளிப்படுத்தினார் கள். அதனாலேயே எமக்கிடையே நெருக்கம் குறைந்திருந்தது. பிள்ளைகள் தவறாது என்னை கும்பிடத் தலைப்பட்டனர். பின்னர் என்னோடு வந்த அனைவரையும் அவ்வாறே கும்பிடுவார்கள். என்னோடு சென்ற வயது குறைந்த நபரையும் அவ்வாறே வணங்குவார்கள். நாம் தடுத்தாலும் அதை பொருட்படுத்தாமல் வணங்குவார்கள். திரும்பிச்செல்லும்போதும் எம்மைவணங்கியே விடை தருவார்கள்.
2017வருட இறுதி மாதத்தில் முதன் முறையாக இவ்விரு பாடசாலையின் பிள்ளைகளையும் சந்திப்பதற்கான நிகழ்வொன்று க்கு வழியமைத்தோம்.
ஐந்து நாட்கள் இவர்களை ஒன்றாக பழகிவிடும் நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுத்தோம்.
இந்த ஒன்றுகூடல் ஹொரண வாசனா மண்டபத்தில் இடம்பெற்றது.
பிள்ளைகள் இருபாலாரும் பண்டாரகம சர்வோதய மையத்தில் தங்கவைக்கப் பட்டனர். இவர்கள் பண்டாரகமயிலிருந்து ஹொரணைக்கு ஒவ்வொரு நாளும் இரண்டு பஸ்களில் வருவார்கள். வரும்போது பாட்டும் கூத்து மாக சந்தோசமாக இருப்பார்கள்.
முதலாவது நாள் காலையில் என்னைக் கண்டதும் கெபித்திகொள்ளாவை பிள்ளைகள் ஓடி வந்து என்னை வணங்கத்தலைப்பட்டனர். ஒவ்வொருவரும் தனித்தனியாக வந்து என்னை வணங்கிவிட்டுப்போகலா யினர். இதனைமுதன்முறையாக கண்ட துணுக்காய் பாடசாலையின் குழந்தைகள் அதிசயமாக பார்த்தார்கள்.
இத்தனை நாளும் என் கைகளை பற்றிக்கொண்டு அங்குமிங்கும் நடமாடித் திரிந்ததும், என் உடலில் தொங்கியதும் தவறு என்று அவர்கள் நினைத்தார்கள் போலும்.
பாசறையின் இரண்டாம் நாளில் அந்தத் தமிழ்க்குழந்தைகளும் என்னை வந்து கும்பித்தொடங்கினர். எனக்குத்தெரிந்த எல்லா வழிகளிலும் என்னை வணங்கவேண்டாம் என நான் அவர்களிடம் கூறினேன்.
முதன் முதலில் நீங்கள் என் முன்னே இருந்தது போலவே இப்போதும் உங்களைப் பார்க்க விரும்புகிறேன் என்று கூறினேன். அதுமட்டுமல்ல சிங்களப் பிள்ளைகளும் உங்களைப் போலவே என்முன் சுதந்திரமாக இருப்பதையே நான் விரும்புகிறேன் என்று எடுத்துக் கூறினேன்.
ஆனால் அதுவொன்றும் பலனளிக்கவில்லை. அடுத்தடுத்த நாட்களில் பிள்ளைகள் வரும்போதும் போகும் போதும் அவர்கள் கண்ணில் படாமல் அவர்களை தவிர்த்து விலகி இருந்தேன்.
கடந்த சில காலங்களாக அவர்களை பார்த்துவரப் போகக்கிடைக்கவில்லை.
இப்போது அவர்களில் பலர் திருமணமும் முடித்து விட்டார்கள். விடுமுறை கிடைத்ததும் அவர்களை காணச் சென்றுவர உத்தேசித்துள்ளேன்.
(அந்த ஒன்றுகூடல் தொடர்பான காணொளி கீழே பிண்ணூட்டமொன்றாக இடப்பட்டுள்ளது.)